விஷால் தற்போது அவர் இயக்கி நடிக்கவுள்ள துப்பறிவாளன் 2 பட பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “எப்போதும் என்னுடைய பிறந்தநாளை இந்த இடத்தில்தான் தொடங்குவேன். இவர்களை சந்திக்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அதை பாக்கியமாகவும் உணர்கிறேன்” என்றார்.
பின்பு அவரிடம் மலையாளத் திரையுலகில் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழிலும் ஒரு 10 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்கம் சார்பில் அமைக்க இருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அதன் அறிவிப்பு வரும். இப்படி செய்ய வேண்டியது எங்கள் கடமை. நடிகர் சங்கம் என்பது வெறும் ஆண்களுக்கு மட்டும் இல்லை. பெண்களுக்கும் தான். அவர்களும் சரி சமமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும். முதலில் பெண்களுக்கு மன தைரியம் வேண்டும். பாலியல் தொல்லை கொடுக்கும் நபரை காலணியால் அடிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டனை அனுபவிப்பார்கள்.
தமிழில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழலில் இருக்கிறது. ஆனால் மேலோட்டமாக பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறதா என்பதை சொல்ல முடியாது. காலம் காலமாக தமிழ் சினிமாவிலும் அந்த குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் இருக்கக்கூடும். இது போன்ற வேலைகளை உப்புமா கம்பெனிகள் செய்கிறார்கள். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதற்கு நடவடிக்கை எடுக்க நாங்கள் என்ன காவல்துறையா?, ஆனால் பாதிக்கப்படும் பெண் நடிகர் சங்கத்துக்கு புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். பெண்களுக்கு 20 சதவீதம் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது. 80 சதவீதம் வாய்ப்பிற்காக ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அவர்கள் சுதாரித்து செயல்பட வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எதுக்கு ஸ்ட்ரைக் நடத்துகிறார்கள். ஸ்ட்ரைக் நடத்தினால் தொழிலாளர்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். என் மீதும் தனுஷ் மீதும் குற்றச்சாட்டு வைத்தனர். ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த கடிதமும் நடிகர் சங்கத்துக்கு வரவில்லை. அவர்கள் மட்டுமே பேசிக்கொண்டு அறிக்கை வெளியிடுவது சரியான அணுகுமுறை கிடையாது” என்றார். பின்பு அவரிடம் கடந்த சில ஆண்டுகள் முன்பு அவர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்து கேள்வி எழுப்பிய போது, “ஸ்ரீ ரெட்டி யாரென்றே தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டையெல்லாம் தெரியும். ஒருவர் மீது குற்றம் சுமத்துவது ஈஸி. ஆனால் என்ன நடந்தது என்ற உண்மை வெளியில் வரும் போது தான் தெரியும்” என்றார்.