கேரளாவில் அம்மாநில திரைப்படக் கொள்கை மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் மூத்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்களுக்கு படம் எடுக்க அரசாங்கம் வழங்கும் ரூ.1.5 நிதி, ஊழலுக்கு வழிவகுக்கும்” எனப் பேசியிருந்தார். மேலும் அரசாங்கத்தின் நோக்கம் நல்லதுதான், ஆனால் அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும் என தெரிவித்து அவர்களுக்கு வழங்கும் நிதியை ரூ.50 லட்சமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இவர் 16 முறை தேசிய விருது பெற்றதும், இந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றதில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவரின் பேச்சு மலையாளத் திரையுலகில் விவாதத்தை கிளப்பியது. இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. கேரள மாநில எஸ்சி/எஸ்டி ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சையில் அடிக்கடி சிக்கும் நடிகர் விநாயகன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது அவருக்கே எதிராக மாறி விமர்சனத்துக்குள்ளானது. அதனால் அவர் வெளியிட்ட பதிவை நீக்கினார். 

இதையடுத்து புகழ் பெற்ற பாடகர் யேசுதாஸ் குறித்து அவமதிக்கும் வகையில் மற்றொரு பதிவு போட்டிருந்தார். இதற்கும் எதிர்வினை பலமாக எழுந்ததால் அடூர் கோபாலகிருஷ்ணன் விவகாரத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கோரியிருந்தார். இதனையடுத்து பாடகர் வேனுகோபால் விநாயகனை கடுமையாக சாடியிருந்தார். மலையாள பின்னணி பாடகர் சங்கமும் தொழிலாளர் சங்கமும் விநாயகனுக்கு கண்டனம் தெரிவித்தது. 

இவர்களைத் தொடர்ந்து எர்ணாகுளம் காங்கிரஸ் தலைவர் முகமது ஷியாஸ் எதிர்ப்பு தெரிவிததோடு விநாயகனுக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் எனக் கூறினார். மேலும் அவரால் ஏற்படும் சமூக அச்சுறுத்தலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி தொடர்ந்து விநாயகன் மீது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மீடூ விவகாரத்தில் சர்ச்சையான கருத்து தெரிவித்தது முதல் காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி இறப்பு பதிவு தொடங்கி கடைசியாக சி.பி.எம் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனின் இறப்பு பதிவு வரை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதால் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.