hrithik roshan

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisment

தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தயாரிப்பளார் சஷிகாந்த், பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, புஷ்கர் - காயத்ரியே இந்தியிலும் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

Advertisment

அமீர்கான் - சைஃப் அலிகான் கூட்டணியில் இப்படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திலிருந்து அமீர்கான் விலகிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. கரோனா ஊரடங்கால் தடைபட்ட தன்னுடைய பழைய படங்களுக்கு தேதி ஒதுக்க வேண்டியுள்ளதால் இப்படத்தில் அமீர்கானால் நடிக்க முடியவில்லை எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளது.