ADVERTISEMENT

“சாய்ந்த கோபுரத்தை கொண்டாடும் நாம், தஞ்சை கோவிலை கண்டுகொள்வதில்லை” - விக்ரம் வேதனை

11:13 AM Sep 26, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரமிடம், வரலாற்றை தெரிந்துகொள்வதன் அவசியம் என்ன? அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த விக்ரம், “நாம் எகிப்த் பிரமிடுகளை எப்படி கட்டி இருப்பார்கள் என்று பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் நாம் இந்தியாவில் நிறைய கோவில்கள் உள்ளன. உலகிலேயே மிக உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில்தான். சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலை காட்டினார். அந்த கோவிலின் உச்சியில் இருக்கும் கல்லின் எடை மட்டும் 80 டன் கொண்டது. பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தை பார்த்து நாம் வியப்படைந்து பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை தாண்டி இன்று வரை நிலைத்து நிற்கிறது. அது எப்படி என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

எந்த விதமான பிளாஸ்டர்களும் இல்லாமல் கட்டப்பட்டது. எந்தவித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் யானைகள், காளைகள் மற்றும் மனிதர்களின் உதவியுடன் மட்டுமே கட்டப்பட்டது. அத்துடன் ராஜராஜ சோழன் அவரது ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் அணைகளை காட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனித் துறையை அமைத்துள்ளார். இலவச மருத்துவமனை காட்டியுள்ளார். நதிகளுக்கு பெண்களின் பெயரையும் சூட்டியுள்ள அவர்கள், அந்த காலத்திலேயே தேர்தல்களும் நடத்தியுள்ளனர்.

இதெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவையனைத்தும் 9 ஆம் நூற்றாண்டில் நடந்தவை. இதற்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டு பிடித்துள்ளார். இதன் மூலம் நாம் எந்த அளவு பெருமை மிகு கலாச்சாரத்தை பின்பற்றியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இதெல்லாம் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இதில் வட இந்தியா, தென் இந்தியா பிரித்து பார்க்கக்கூடாது. இந்தியர்கள் அனைவரும் இதனை கொண்டாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT