
பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், விக்ரமிடம், “ஒவ்வொரு படத்திற்கும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளீர்கள் இருந்தாலும் உங்களுக்கு விஜய், அஜித் அளவுக்கு ரசிகர்கள் இல்லை ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் , “என் ரசிகர் பட்டாளம் பற்றி உங்களுக்கு தெரியாது, தியேட்டரில் வந்து பாருங்க, உங்களுக்கு தெரியும். இந்த டாப் 3,4,5 இதெல்லாம் வேணாங்க, ரசிகர்கள் இருப்பதைபோல பொதுவான ஆடியன்ஸ் இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை எதாவது ஒரு விதத்தில் எல்லா ஆடியன்ஸும் என்னுடைய ரசிகர்கள்தான்” என்று பதிலளித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய விக்ரமின் ரசிகர் ஒருவர், “நீங்க சொல்லுகிற நடிகர்களுக்கு எல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்க ஆனால் விக்ரமுக்கு ஹேட்டர்ஸ் இல்லை” என்றார்.
அதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கையாளரிடம் விக்ரம் பேசுகையில், “இந்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. நீங்க தியேட்டருக்கு வருவீங்க தான? உங்க நம்பரை என் அசிஸ்டண்ட்டிடம் கொடுங்க நான் பிறகு பேசிக்கிறேன். நீங்க சொன்ன நடிகர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்கள். அது நாளைக்காகக் கூட இருக்கலாம்” என்றார் . அதற்கு அந்த பத்திரிக்கையாளர், “நீங்க பெரிய லெவலுக்கு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார். அதற்கு விக்ரம், “நான் பெரிய லெவலுக்கு வந்துவிட்டேன். ‘தூள்’, ‘சாமி’ எல்லாம் பண்ணவன்தான் நான், எனக்கு தெரியாதது எதுவும் கிடையாது. ஆனால், சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகும் முயற்சியில் இறங்கினேன். அந்த படங்கள் சில நேரம் சின்னதாக ஆகிவிடும். இருந்தாலும் நான் முயற்சி செய்தேன் அப்படி உருவானதுதான் ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’.
நீங்கள் என்னுடைய எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள் ‘ராவணன்’ இந்தியில் மட்டும்தான் ஓடவில்லை. ஆனால் அது சிறந்த திரைப்படம். இன்றைக்கும் எங்க வீட்டில் கூட ராவணன்தான் என்னுடைய சிறந்த படம் என்கிறார்கள். ‘கிங்’ திரைப்படமும் அந்த சமயத்தில் மிகவும் அட்வான்ஸானது. இது எல்லாமே முயற்சிதான். நீங்க சொல்லும் அந்த இடத்திற்கு போக வேண்டும் என்றெல்லாம் இல்லை” என்றார்.