அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கலாட்டா காமெடி படமாக உருவாகியிருந்திருந்தது. 30 வயதிற்கு மேற்பட்ட ஆண் மகனுக்கு இன்றைய சூழலில் திருமணம் என்பது எந்த அளவு எட்டாக்கனியாக இருக்கிறது. அதை ஒரு குடும்பம் எப்படி எல்லாம் சமாளித்து அதில் இருந்து மீண்டு திருமணம் நடத்தி வைக்கின்றனர் என்ற இன்றைய சமகால நிகழ்வுகளை இப்படம் பேசியிருந்தது. கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையொட்டி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது பட அனுபவங்களை பகிர்ந்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். 

Advertisment

அந்த வகையில் விக்ரம் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது.  இப்படம் வெளியான பிறகு திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு இப்படக்குழு மூலம் கிடைத்தது. நீண்ட நாள் கழித்து மதுரைக்கு சென்றிருந்தேன். பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன்.  ஆனால் இந்த படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரை உள்ள திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாக திரையரங்கத்திற்கு சென்ற போது மிகப்பெரும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து ரசித்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் இந்தப் படக் குழு மீது காட்டிய அன்பிற்கும் இந்த படத்தின் மீது ஊடகத்தினர் காட்டிய அன்பிற்கும் நன்றி. 

நான் ஷான் ரோல்டனின் ரசிகன். இந்தப் படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது. இந்த படத்தின் மூலம் நல்லதொரு ஆல்பத்தை கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் படத்திற்கு ஹீரோயின்ஸ் இருவரும் இரண்டு பில்லர்கள். அற்புதமாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறாய் என பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம். இந்தத் திரைப்படத்தை திரையுலகினர் பலரும் பார்த்து ரசித்து விட்டு என்னை பாராட்டினார்கள். இந்த படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறேன். 

'இறுகப்பற்று' படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததாக இயக்குநர் சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர். அதையெல்லாம் உடைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் இணைந்து வெளியான அனைத்து திரைப்படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஏனெனில் இது என்னுடைய துறை. சேர்ந்து ஓடினால் நன்றாக இருக்கும்” என்றார்.