vikram about thangalaan jacket scene

பா.ரஞ்சித் விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்திலிருந்து வெளியான டீஸர், ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த சுதந்திர தினத்தன்று (15.08.2024) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியது. மேலும் இப்படம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனம் பெற்று, இதுவரை ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற பெண்கள் மேலாடை அணியும் காட்சிகள் மற்றும் அந்த காட்சிக்குப் பிறகு விக்ரம் பேசும் வசனம் உள்ளிட்டவை பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த காட்சியைப் படக்குழு யூடியூபில் வெளியிட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vikram about thangalaan jacket scene

Advertisment

இந்நிலையில் விக்ரம், ரஞ்சித் ஆகியோர் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இருவரும் சென்னையிலுள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ஆடியன்ஸுடன் இணைந்து படம் பார்த்தனர். அப்போது ரசிகர்களிடம் பேசிய விக்ரம், “மினிக்கி பாடலுக்கு முன்பு வரும் மேலாடை சீன் சூப்பரா இருந்துச்சுல. அந்த காலத்துல மேலாடை போடுவது கஷ்டமான, முக்கியமான விஷயம். அதை கவிதை மாதிரி ரஞ்சித் இயக்கியது மிகவும் பிடிச்சிருந்துச்சு. கஷ்டப்பட்டு ரசிச்சு பண்ண படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதுல சந்தோஷம். அந்த காலத்துல முன்னோர்கள் எப்படி இருந்தாங்கன்னு நம்ம எல்லாத்துக்கும் தெரியும். ஆனா வீட்டுல இருக்க சின்ன பசங்களுக்கு தெரியாது, அதனால கண்டிப்பா அவங்களையும் கூட்டிட்டு வந்து படம் பாருங்க” என்று பேசியதோடு ‘மினிக்கி மினிக்கி...’ பாடலுக்கு திரையரங்கில் நடனமாடி காண்பித்தார்.