
வெள்ளித்திரை, சின்னத்திரை என்று தன்னுடைய இயல்பான நடிப்பால் பல ஆண்டுகளாக நம்முடைய மனங்களைக் கவர்ந்து வரும் நடிகை விஜி சந்திரசேகர் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் நம்பிக்கை. ஆந்திராவில் பிறந்த நான் வளர்ந்தது முழுவதும் தமிழ்நாட்டில் தான். குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கான வாய்ப்புகள் இன்று அதிகம் இருப்பதால் சிறுவயது முதலே எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை சொல்லிக் கொடுத்து நாம் அவர்களை வளர்க்க வேண்டும். கல்வி தான் முக்கியம் என்பதை வலியுறுத்த வேண்டும். கல்வி கற்று முடித்த பிறகு, சரியான வயதில் காதல் போன்ற விஷயங்களில் நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். மிக இளம் வயதில் மனதை அலைபாய விடக்கூடாது.
சினிமா நடிகர்கள் என்றாலே தவறாகப் பார்க்கும் எண்ணம் பலருக்கு இருக்கிறது. என் மகள் நடிகையாக இருப்பதால் சினிமாத் துறையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். டைம்பாஸ்க்காக எதையுமே செய்வது தவறு. நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நடிப்பு வேண்டாம் என்றார் கணவர். ஆனால் அவருடைய ஒத்துழைப்பு எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் எப்போதுமே இயக்குநர் விரும்பும் நடிப்பை வழங்கும் நடிகை தான்.
கடைக்குட்டி சிங்கம், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நான் செய்த பாத்திரங்கள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. குறைவான படங்களில் நடித்தாலும் தரமான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதால் தான், நான் நடிக்கும் கேரக்டர்கள் மக்கள் மனதில் நிற்கின்றன. திருமணத்திற்கு முன்பே நானும் என் கணவரும் நண்பர்கள் தான். ஆனால் எங்களுடைய திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டது. சூரரைப் போற்று பட சமயத்தில் சூர்யா என்னுடைய கணவரை அழைத்து சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டார். சூர்யா எங்களுடைய குடும்ப நண்பர்.
முதன்முதலில் பாலச்சந்தர் சாரின் நிறுவனத்தில் சீரியல் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயங்கினேன். அதற்கு முன்பு ரஜினி சாருடன் தில்லுமுல்லு படத்தில் நடித்திருந்தேன். இதன் பிறகு தொடர்ந்து படங்களிலும் சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினேன். அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இப்போதும் என் கணவர் வீட்டிலிருக்கும் நாட்களில் நான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை. குடும்பத்திற்கான நேரத்தை நாம் செலவிட வேண்டியது அவசியம்.
சிலருக்குத் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையினால் குடும்பத்தில் சில இழப்புகள் ஏற்படும். சிலருக்கு குடும்பத்தால் தாங்கள் விரும்பியவற்றை செய்ய முடியாமல் இருக்கும். ஆனால் அனைத்துமே எனக்கு அமைந்தது கடவுளின் வரம் தான். சினிமாவை விட சீரியல்கள் தான் எனக்கு அதிகம் பிடிக்கும். சினிமாவில் வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். சீரியலில் அந்தப் பிரச்சனை இல்லை.
சுயமரியாதையும் அமைதியும் தான் நான் வாழ்வில் அதிகம் விரும்புவது. வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகு ஒரு ஆணால் ரிலாக்ஸ் செய்துகொள்ள முடியும். ஒரு பெண்ணால் அது முடியாது. வீட்டிலும் வந்து வேலை செய்ய வேண்டும். பெண்களுக்கு ஓய்வே கிடையாது. பெண்கள் உண்மையில் தெய்வங்கள் தான்.