/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/46_28.jpg)
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற மாமனிதன் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ”மாமனிதன் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டு, ஆஹா ஓடிடியில் படம் பார்த்தீர்கள் என்றால் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரம் எல்லோருடைய மனதையும் தொடும். அனைவரது வாழ்க்கையோடும் இந்தப் படத்தை பொருத்திப் பார்க்க முடியும். நடிக்கும்போதும் டப்பிங்கின் போதும் இந்தப் படம் எவ்வளவு உயிர்ப்பான படம் என்பது புரிந்தது. தமிழ் சினிமாவில் இயக்குநர் சீனு ராமசாமி போல படம் எடுக்க இன்றைக்கு யாரும் இல்லை.
கதாநாயகன் ஊரைவிட்டு ஓடிப்போகிறாரே என்று இயக்குநரிடம் கேள்வி கேட்டதுபோல என்னிடமும் கேட்டார்கள். நான் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை. அவர்கள் சிந்திக்கிற மாதிரியே கதாபாத்திரமும் சிந்திக்க வேண்டும் என்று நினைத்தால் படத்தை எப்படி பார்க்க முடியும் என்று தெரியவில்லை.
மாமனிதன் மிக எளிமையான படம். கதாநாயகன் எளிமையான மனிதன். அந்தப் படத்திற்கு விளக்கம் கொடுப்பது அவசியமற்றது என்று நினைக்கிறேன். சில படங்களை அந்த நேரத்தில் கொண்டாட தவறிவிடுவோம். காலம் கடந்த பிறகுதான் அது தெரியும். மாமனிதனும் ராதாகிருஷ்ணனும் எப்போதுமே மனதில் இருப்பார்கள். இது பழைய படமாகாது என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)