
வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகியுள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாம். கடைசி நாளில் அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் அவர் மிகவும் எமோஷ்னலாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டு முடிந்தது. விரைவில் முழு படப்பிடிப்பும் முடியவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், விஜய் பிறந்தநாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு, படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விஜய்யின் வழக்கமான வசனமான ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற வசனத்தைசொல்லி போலீஸ் வேடத்தில் விஜய் நடந்து வந்து காட்சி தருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)