vijayakanth about siddique

மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் சித்திக், தமிழில் விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்', விஜயகாந்தின் 'எங்கள் அண்ணா', பிரசன்னாவின் 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். பின்பு மீண்டும் விஜய்யை வைத்து 'காவலன்' மற்றும் கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கியிருந்தார்.

Advertisment

கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனைக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்திக் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததால் எக்மோ (ECMO) கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்பு நேற்று (08.08.2023) இரவு 9.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்தது. இவரது மறைவுக்கு தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த், சித்திக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் அவர்கள், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

நான் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில் , இயக்குநர் சித்திக்குடன் பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

'எங்கள் அண்ணா' படம் மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான 'க்ரோனிக் பேச்சுலர்' படத்தின் ரீமேக். மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும்இயக்கியநிலையில் படத்தில் வரும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நமிதா இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.