
நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் இன்றைய இயக்குநர்கள் சமூக அக்கறையுள்ள படங்கள் எடுக்கிறார்களா? விஜயகாந்த் அவர்களை வைத்து அதிக படங்கள் எடுத்த இயக்குநர் என்ற பெருமை உங்களுக்கு இருக்கிறது. அவருடனான பயணம் பற்றி சொல்லுங்கள் என்கிற கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...
எனக்குப் பிறகான அடுத்த தலைமுறை இயக்குநர்கள் எல்லாம் சமூக அக்கறையுள்ள படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னிடம் உதவி இயக்குநராக இருந்ததால் என்னுடைய பாதிப்பு அவர்களுக்குள்ளும் இருக்கிறது. சமூகப் பொறுப்புள்ள படங்கள் பண்ண ஆரம்பிச்சாங்க. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர் பவித்ரன், இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கு

நடிகர் விஜயகாந்த் என் இயக்கத்தில் மொத்தம் 19 படங்கள் நடித்தார். பத்து படங்களில் விஜயகாந்தை பெரிய ஹீரோவாக கொண்டு வந்தேன். எல்லாமே வெற்றிப்படங்கள். ஓம்சக்தி என்ற படத்தில் வில்லனாக களமிறக்கினேன். அது வெற்றி பெறவில்லை.
இயக்குநர் ஷங்கர் என்னோடு 17 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். என்னோட தாக்கம் இப்போது வரை அவருடைய படங்களில் இருக்கிறது. திரைத்துறையைப் பொறுத்தவரை எந்த தொழில்நுட்பக் கலைஞராக இருந்தாலும் ஒரு சமூகப் பொறுப்பு வேண்டும். ஏனெனில் சினிமா என்பது ஒரு பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தை நாம் பயன்படுத்துகிறோம். அதில் தவறான கருத்து இருந்தால் அது இளைஞர்களைப் பாதிக்கும். எனவே, சமூகப் பொறுப்போடும் அக்கறையோடும் திரைப்படங்கள் எடுத்து சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.