விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இப்படத்தில் ரூபிணி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘ஆட்டமா தேரோட்டமா’ என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

விஜயகாந்தின் 100வது படமாக வெளியாகியிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டத்தை அடைமொழியாக பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த ஏப்ரலுடன் 34 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனையொட்டி இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும் பிளானில் இருப்பதாக படக்குழுவினர் முன்பு தெரிவித்திருந்தனர். மேலும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4கே தரத்தில் உயர்த்தப்பட்டு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் விஜயகாந்தின் பிறந்தநாள் வருவதால் அதை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி படம் ரீ ரிலிஸாகிறது. தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கள் கிழமை வருகிறது. அதனால் அதற்கு மூன்று நாள் முன்னதாக வெள்ளிக்கிழமை படம் வெளியாகவுள்ளது. இதனால் விஜயகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி சினிமா ரசிகர்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.