விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இப்படத்தில் ரூபிணி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘ஆட்டமா தேரோட்டமா’ என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

விஜயகாந்தின் 100வது படமாக வெளியாகியிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டத்தை அடைமொழியாக பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இப்படம் 34 ஆண்டுகள் கழித்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4கே தரத்தில் மறுஉருவாக்கம் செய்து வருகின்ற 22ஆம் தேதி ரீ ரிலிஸாகிறது. விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரீ ரிலீஸை முன்னிட்டு படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். 

அவர் பேசியதாவது, “தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் பின் ரிலீஸ் ஆவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தரரும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார். இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏற்கனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது.

சரத்குமார் சாருக்கு படப்பிடிப்பின் போது கழுத்தில் பிரச்சனை இருந்தது. அதையெல்லாம் மீறி இந்த படத்தில் அவர் நடித்தார். மன்சூர் அலிகான் சார், நான் படப்பிடிப்பிற்கு போனாலே தூக்கி வைத்து விளையாடுவார். அவருடைய குழந்தைகளுடன் நான் விளையாடியிருக்கிறேன். கேப்டன் மறைந்த அன்று அவரது காலடியிலே கடைசி வரை இறுதி அஞ்சலி செலுத்தினார். அந்தளவு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அவர்.     

Advertisment

நான் இந்த படம் பண்ணும் போதுதான் பிறந்திருந்தேன். அதனால், அவருடைய பெயரில் இருந்து விஜய்யை எடுத்துக் கொண்டு படத்தின் பெயரோடு சேர்த்து விஜய பிரபாகரன் என எனக்கு கேப்டன் பெயர் வைத்தார். அதே சமயம் தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்தும் வகையிலும் வைத்தார். சின்ன வயதாக இருக்கும் போது பெயரின் பலம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் இப்போது அதை உணர்கிறேன். இந்த விழாவிற்கு என்னை கூப்பிட்ட போது சுற்றுப்பயணத்தில் இருந்தேன். இருப்பினும் மறுக்கமுடியவில்லை. அன்பாக யார் கூப்பிட்டாலும் அங்கு போய் நிற்க வேண்டும் என கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் இங்கு வந்து நிற்கிறேன்” என்றார். அப்போது எமோஷ்னலாகி கண்கலங்கத் தொடங்கினார். தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு அவர் நின்றுகொண்டிருக்கையில், கீழிருந்து ஒருவர் வருங்கால எம்.பி. எனக் கூச்சலிட்டார். உடனே விஜய பிரபாகரன், “அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. கடைசி வரை விஜயகாந்த் மகன் என்பது தான் எனக்கு முக்கியம்” என பதிலளித்தார். தொடர்ந்து கண்கலங்கியபடியே பேசிய அவர், “கடைசி வரை எங்க அப்பாவை நான் நினைத்து கொண்டு இருப்பேன்” என முடித்து கொண்டார்.