/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DYtns8vVMAAmsgl.jpg)
விஜய் 62 ஷூட்டிங் நடப்பதாக சொல்லப்படும் இடம்
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இதனால் தற்போது படப்பிடிப்பில் இருந்த முன்னணி நடிகர்களின் படங்களோடு சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரை உலகை நம்பி வேலை செய்த 5 லட்சம் சினிமா தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடைகளை மீறி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
பிரத்யேக அனுமதியுடன் விஜய் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இந்த செய்தி தமிழ் திரையுலகில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் திரையுலகில் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்,தனது டுவிட்டர் பக்கத்தில்..."இன்னிக்கு விஜய் படம் விக்டோரியா ஹால்ல சூட்டிங் நடக்கிறதா ஒரு நியூஸ் ...விசாரிச்சா ஏதொ special permission வாங்கி நடக்குதாம்(authentic news!) அப்போ.....?......?...?" என்று பதிவிட்டு தன் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் தயரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்... "விஜய் பட படப்பிடிப்பு சென்னை விக்டோரியா ஹாலில் நடக்கிறது. எங்கே நமது ஒற்றுமை..? எப்படி நம் சங்கம் இதற்கு மட்டும் பிரத்யேக அனுமதி கொடுக்கலாம்..? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தன் எதிர்ப்பை டுவிட்டர் வாயிலாக பதிவிட்டிருந்தார். மேலும், இன்னும் பல சினிமா பிரபலங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது இந்த விவகாரத்திற்கு விளக்கமளித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதன் படி கடைசியாக நடந்த தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டத்தில், முடியும் தருவாயில் இருக்கும் படப்பிடிப்புகளுக்கு மட்டும் ஓரிரு நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் விஜய்62 படக்குழு, நாடோடிகள்2 படக்குழு மற்றும் மேலும் இரண்டு சிறிய படங்களின் படக்குழு ஆகியோரிடமிருந்து சிறப்பு அனுமதி கேட்டு கடிதங்கள் வந்தன. இதையடுத்து அதை பரிசீலனை செய்த பின்னர் தயாரிப்பாளர் நலன் கருதி குறுகிய கால படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி அளித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் தயரிப்பாளர்கள் யாரும் இதை பற்றி எந்த அவதூறு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)