/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/472_4.jpg)
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது ரஜினி, சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.
இதனிடையே காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காஷ்மீர் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் என பல்வேறு கேள்விகள் எழுப்பி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், கோபி நயினார் உள்ளிட்டோரும் படக்குழுவை விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நடிகர் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விஜய்யுடன் எடுத்த பழைய புகைப்படத்தையும் பகிர்ந்து, இரண்டு புகைப்படத்திற்கும் 12 வருஷம் 2 மாசம் 1 நாள் 15 மணி நேரம் இடைவெளி என படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனை பார்த்து கூறுவது போல் குறிப்பிட்டுள்ளார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ராஜ்குமார் பெரியசாமி உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)