
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 'ரஞ்சிதமே' என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை விஜய் மற்றும் மானஸி பாடியுள்ளார்கள். மேலும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடலைக் கேட்கையில் ஒரு ஜாலியான காதல் குத்துப் பாட்டு எனத் தெரிகிறது. இப்பாடலின் முழு லிரிக் வீடியோ வருகிற 5ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்பாடலில் வரும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே’ என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பொதுவாக விஜய் குரலில் வெளியாகும் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்தப் பாடலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.