vijay tvk pledge

Advertisment

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், 2026ல் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாமற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் த.வெ.க.வின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார். பின்பு மேடை ஏறிய விஜய், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என உறுதிமொழி ஏற்றார். அவரோடு சேர்ந்து த.வெ.க. நிர்வாகிகளும் உறுதிமொழி ஏற்றனர்.

Advertisment

பின்பு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அந்தக் கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறம் இருக்க நடுவில் மஞ்சள் நிறம் இருக்கின்றன. அதில் மஞ்சள் நிற பகுதியில் 2 போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் மற்றும் அந்த மலரைச் சுற்றி 23 பச்சை நிற நட்சத்திரங்களும், 5 வெளிர் நீல நிற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார் விஜய். அதில், ‘தமிழன் கொடி பறக்குது...தலைவன் யுகம் பொறக்குது... வீரக் கொடி... விஜயக் கொடி’ உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளது.