‘நான் தாம்மா விஜய்...’ - நெல்லையில் நடந்த நெகிழ்ச்சி

vijay tirunelveli function

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். மேலும் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடக்கிறது. அதில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25000 என விஜய் வழங்கினார். மேடையில் நின்று வரிசையாக வந்த மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார் விஜய்.

அப்போது வாங்க வந்த பெண்மணி விஜய்யை அடையாளம் தெரியாதவாறு எல்லாருக்கும் வணக்கம் வைத்து சென்றுகொண்டிருந்தார். அவரை மேடையில் இருந்தவர்கள் விஜய்க்கு அருகில் அழைத்து வந்து நிறுத்தினர். அவரை பார்த்த விஜய், ‘நான் தாம்மா விஜய்...’ என்ற தொணியில் சொல்ல, உடனே அந்த பெண்மணி அவரது கன்னத்தை கிள்ளி முத்தம் நெகிழ்ச்சியுடன் கொடுத்தார்.

அதே வேளையில் ஒரு பெண்மணி மளிகை பொருட்களை வாங்கும் போது, பொருளின் பாரம் தாங்காமல் தடுமாறினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்ய, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் கோவமாக நிர்வாகிகளை திட்டினார். அப்போது அவரை ‘கூல்...கூல்...’ என்ற தொணியில் விஜய்அமைதிப்படுத்தினார்.

actor vijay Bussy Anand Tirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe