/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/60_71.jpg)
விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்மையில் தனது 68வது படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து 3 வருடம் விலகி, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்துச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பனையூரில் தனது மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோனை நடத்தினார்.
கடந்த டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத்தொடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடப்படும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்யப்பட்டது.
அதே சமயம் இன்று 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' என்ற இரவு பாடசாலை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் பயிலகம் சென்னை பெரம்பூரில் உள்ள கொடுங்கையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து திறந்து வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)