Skip to main content

"பாடப் புத்தகத்தில் இது குறித்து இடம் பெற வேண்டும்" - ஆசையைப் பகிர்ந்த விஜய்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

vijay speech at student award function

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில்  இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார். 

 

இந்த கல்வி விருது விழா நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில் மேடையில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அவர் பேசுகையில், "நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை நீங்க தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நம்ம கண்ணையே குத்துவதை கேள்விப்பட்டிருக்கீங்களா. அதுதான் இப்போது நடந்துக்கிட்டு இருக்கு. நாமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் எதை சொல்கிறேன் என்றால் காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது.

 

ஒரு எடுத்துக்காட்டாக 1 ஓட்டுக்கு 1000 ரூபாயை 1 அரை லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் 15 கோடி ஆகிவிட்டது. இவ்ளோ கோடி ஒருத்தர் செலவு செய்தால், அதற்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும். இதையெல்லாம் நீங்க யோசித்து பார்க்க வேண்டும். மேலும் பாடப் புத்தகத்தில் இது குறித்து இடம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோரிடம் சென்று காசு வாங்கிவிட்டு ஓட்டு போட வேண்டாம் என சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அது கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டு வரவுள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள். இது எப்போது நிகழ்கிறதோ அப்போது தான் உங்களுடைய கல்வி முறையை முழுமைப்படுத்தும். 

 

இறுதியாக ஒரு கோரிக்கை உங்களுடைய வகுப்பிலோ, உங்களுடைய தெருவிலோ தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். தோல்வி அடைந்த அவர்கள் நீங்கள் கொடுக்கிற தைரியத்தின் மூலம் வெற்றி பெற்றால், அது நீங்க எனக்கு கொடுக்கிற பரிசாக நான் எடுத்துக் கொள்வேன். மாணவர்கள் எந்த ஒரு சூழலிலும் தவறான முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும். உங்களை தாழ்வுபடுத்த ஒரு கூட்டம் கண்டிப்பாக இருக்கும். அதை எல்லாம் கண்டுக்காதீங்க. உங்களுக்குள் ஒருவர் இருப்பார். அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் கேளுங்கள். வளர்ப்போம் கல்வி" எனத் தனது உரையை முடித்துக் கொண்டார்.  

 

 

சார்ந்த செய்திகள்