தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் ‘உங்கள் விஜய்... நான் வரேன்...’ என்ற பாடலுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. மேடையில் பேசிய விஜய் தொண்டர்களின் ஆராவாரத்துக்கிடையே உணர்ச்சிப் பொங்க பேசினார். அப்போது மறைந்த நடிகரும் தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.
விஜய் பேசுகையில், “நான் இந்த மண்ணுல காலெடுத்து வச்சவுடனே ஒரே ஒருத்தர பத்தி தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அவர் யாருன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, நமக்கு ரொம்ப புடிச்சது எம்.ஜி.ஆர். தான். அவரோட பழகுறதுக்கு எனக்கு வாய்பு கிடைக்கல. ஆனா அவர மாதிரியே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், விஜயகாந்தோட பழகுறதுக்கு நிறையவே வாய்ப்பு கிடைச்சுது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என அவரை நினைவு கூர்ந்தார்.