vijay singing in thalapathy 68

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல்நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்படிப்பு இந்த மாத தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் பூஜை வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ் மற்றும் சென்னை 600028 படத்தில் நடித்த அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "அஸ்கு லஸ்கா, கூகுள் கூகுள், செல்பி புள்ள பாடலுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட பாடல்களில் இரண்டுபாடல்கள் விஜய் பாடியவை. அதே படங்களில் மற்ற பாடல்களையும் எழுதிய மதன் கார்க்கி விஜய் பாடிய பாடல்களை மட்டும் குறிப்பிட்டுள்ளதால், தளபதி 68 படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடவுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

லியோ படத்தில் விஜய் பாடிய 'நா ரெடி...' பாடல் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில சர்ச்சையையும் எதிர்கொண்டது. மேலும் 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக எந்த படத்திலும் பாடாமல் இருந்த விஜய் துப்பாக்கி படத்தில் மதன் கார்க்கி எழுதிய 'கூகுள் கூகுள்...' பாடல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.