2026 தேர்தல்தான் இலக்கு என்ற குறிக்கோளுடன் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்த விஜய், உறுப்பினர் சேர்க்கை செயலி, இரண்டு மாநில மாநாடு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் என அடுத்தடுத்து ஆயத்தமாகி வருகிறார். கடந்த 13ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்கிறார். முதல் வாரத்தில் திருச்சி, அரியலூரை முடித்த விஜய் அடுத்ததாக நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய பகுதிகளை முடித்தார். எல்லா பரப்புரையிலும் அப்பகுதியில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி திமுக அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் இந்தவாரம் நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். அதன்படி இன்று, சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்ற அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முதலில் நாமக்கல் சென்றார். அப்போது அவரை வரவேற்க வழிநெடுக தவெக தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கினர். ஒரு தொண்டர் விஜய்யின் பரப்புரை வாகனத்தின் மாதிரியை பரிசளித்தார். மற்றொருவர் சூலாயுதத்தை பரிசாக கொடுத்தார்.
இதனையடுத்து ஒருவர் அஜித்துடன் விஜய் இருக்கும் போட்டோ ஃபிரேமை பரிசாக அளித்தார். அதில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பர்வையிலே’ படத்தில் இருவரும் கைகோர்த்து நடக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அப்பரிசை வாங்கிய விஜய், ‘பிரியமுடன் விஜய்’ என கையெழுத்திட்டு அந்த நபருக்கு திருப்பி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.