
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளியானது. பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், பெரும் வரவேற்பை பெற்றது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டைபெற்றது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை ரஜினி, விஜய் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டினர். ஓ.டி.டி.யில் வெளியான பிறகு வட இந்தியாவிலும் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்தது.
இப்படம் 100 நாளை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதால் படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் நித்திலன் சாமிநாதனுக்கு பிஎம்டபள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கியது. இப்படம் இந்தியில் அமிர் கான் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இப்படம் சீனாவில் கடந்த 29ஆம் தேதி 40,000 திரைகளில் இப்படம் வெளியானது. மேலும் சீன பார்வையாளர்கள் படத்தை பார்த்து ரியாக்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பின்பு இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், இந்தப்படம் அங்கு சாதனை படைத்து வருவதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இரண்டு நாட்களில் கிட்டதட்ட ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் சீனாவில் பெற்ற பெரும் வரவேற்பை தொடர்ந்து ஜப்பானிலும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.