/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/245_20.jpg)
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதியிலிருந்து 19 தேதி வரை நடைபெற்றது.
இவ்விழாவின் நிறைவு விழா நடைபெற்று சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறந்த படத்திற்கான விருது அமரன் மற்றும் ஜமா படத்திற்கு கொடுக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை அமரன் படத்திற்காக சாய் பல்லவி பெற்றுக்கொண்டார். அதே போல் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது லப்பர் பந்து படத்திற்காக அட்ட கத்தி தினேஷுக்கும் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வேட்டையன் படத்திற்காக துஷார விஜயனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வாழை படத்திற்கான பொன்வேலுக்கு கொடுக்கப்பட்டது.
பேவரேட் நடிகருக்கான விருது மெய்யழகன் படத்திற்காக அரவிந்த் சாமிக்கும் பேவரேட் நடிகைக்கான விருது கொட்டுக்காளி படத்திற்காக அன்னா பென்னுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளருக்கான விருதை மகாராஜா படத்திற்காக நித்திலன் சுவாமிநாதனுக்கு கொடுத்தனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் விருது பெற்றுக்கொண்ட விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த திரைப்படவிழாவில் அழகான நினைவுகள் இருக்கிறது. இங்கு நிறைய கற்று இருக்கிறேன். இங்கு ஒவ்வொரு முறையும் படம் போடும்போது ஆர்வமுடன் ஓடி வந்து படம் பார்த்திருக்கிறேன். இப்போது இரண்டாவது முறையாக விருது வாங்கியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த விருது முழுக்க முழுக்க நித்திலன் சாமிநாதனின் சிந்தனைக்கும் உழைப்புக்கும் சொந்தமான விருது. அவருக்கு என்னுடைய நன்றி. விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)