தமிழ்நாட்டில் முதலீட்டுகளை ஈர்க்க கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கு சென்று பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவ அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அதைத்தொடர்ந்து ரூ. 200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஈட்டன் நிறுவனத்துடனும் ரூ. 2,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையத்தை நிறுவ ட்ரில்லியன்ட் நிறுவனத்துடனும் ரூ. 100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் மையத்தை நிறுவ விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்தார்.
இதையடுத்து ரூ. 250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவ விஸ்டியன் நிறுவனத்துடனும் ரூ. 500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்ய அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இதனிடையே பல நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் ஆப்டம் இன்சைட், மெலன் வங்கி ஆகிய நிறுவனங்களை முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இந்நிலையில் நேற்று சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் வேட்டி, சட்டை அணிந்து சென்ற முதலமைச்சருக்கு அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மு.க. ஸ்டாலின், “சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்பதிவில், “எங்கள் முதலமைச்சருக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் கொடுத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.