
சென்னையில் 20வது சர்வதேசத் திரைப்பட விழா கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி நேற்று (22.12.2022) வரை நடைபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டார். மேலும் பார்த்திபன், சீனுராமசாமி, மனோபாலா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். 51 நாடுகளிலிருந்து மொத்தம் 102 படங்கள் திரையிடப்பட்டது. அதில் 12 தமிழ்ப் படங்கள் போட்டிப் பிரிவுக்கு திரையிட்ட நிலையில் 9 படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டது. விருது பட்டியல் பின்வருமாறு,
சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா)
சிறந்த நடிகை - சாய் பல்லவி (கார்கி)
சிறந்த தமிழ் படம் - கிடா
இரண்டாவது சிறந்த தமிழ் படம் - கசட தபற
சிறந்த நடுவர் விருது - இரவின் நிழல்
சிறந்த ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்)
சிறந்த ஒலி அமைப்பு - பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது)
சிறந்த படத்தொகுப்பு - பிரேம் குமார் (பிகினிங்)
சிறப்பு விருது - ஆதார்
அதன் பின்பு பேசிய விஜய் சேதுபதி, "இங்கு திரையிட்ட படங்களைப் பார்த்துவிட்டு கடந்து போய்டாதீங்க. கண்டிப்பா ஒவ்வொரு இயக்குநரும் தங்களின் படங்களின் மூலமாக ஏதாவது கடத்தியிருப்பாங்க. அதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. ஆரோக்யமான விவாதங்களில் ஈடுபடுங்கள். அது மிகவும் நல்லது. வாழ்க்கையின் அனுபவம் தான் திரைப்படமாகிறது. அந்த அனுபவத்தின் வழியா தன்னுடைய பார்வையை ஒரு இயக்குநர், நடிகரின் வழியாக வெளியுலகத்திற்குச் சொல்கிறார்.
முடிந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. எல்லா இயக்குநர்களும் சிறந்த படங்கள் எடுப்பார்களா என்பது தெரியாது. ஆனால் சிறந்த படங்கள் எல்லோராலும் எடுக்கப்பட்டு வருகிறது. எந்தப் படத்தையுமே விமர்சனங்கள் வாயிலாக புரிந்து கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாகப் பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை." எனப் பேசினார்.