“முதல் பட படபடப்பை விட பல மடங்கு படபடப்போடு இருக்கேன்” - விஜய் சேதுபதி

42

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகவுள்ளது

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர். அந்த வகையில் விஜய் சேதுபதி பேசுகையில், “என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு அவர்கள் கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. 

என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். 

சூர்யாவை முதன் முதலில் ஸ்கூலில் சேர்க்கும் போது ஒரு உணர்வு இருந்தது. அதே போலத் தான் இப்போது இருக்கிறது. என்னுடைய முதல் பட ஆடியோ லான்ச் நடந்த போது ஏற்பட்ட படபடப்பை விட இப்போது பல மடங்கு படபடப்போடு இருக்கேன். ஆனாலும் சந்தோஷமாக இருக்கேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

actor vijay sethupathi Surya Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe