சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பக விமானா’. மௌனப்படம் வகையைச் சேர்ந்த இப்படம், தமிழில் ‘பேசும் படம்’ என வெளியானது. அதன் பிறகு இவ்வகை படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனப்படம் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர். நேரடி இந்திப் படமாக உருவாகவுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்திற்கு ‘காந்தி டாக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, மௌனப்படத்தில் நடிக்க உள்ள செய்தி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.