சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் புது படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படம் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்யா மேனனுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார். இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.