குடும்ப படங்களுக்கு பேர் போன பாண்டிராஜ், இந்த முறை அதே ஜானரில் விஜய் சேதுபதி - நித்யா மெனன் கூட்டணியில் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார். எப்பொழுதுமே நகரம் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடிக்கும் வழக்கத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி இந்த முறை கிராமம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா, இல்லையா? 

மதுரையில் மிலிட்டரி ஓட்டல் பாணியில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அவரது மனைவி நித்தியா மெனன் அதே ஹோட்டல் கடையில் தன் பங்களிப்பை கொடுத்து வருகிறார். இருவருக்குள்ளேயும் அடிக்கடி முட்டல் மோதல், காதல், அடிதடி என வழக்கமாக வருகிறது. இவர்களது சண்டையில் இரு வீட்டாரது உறவினர்கள் அடிக்கடி தலையிட்டுக் கொள்வது, இவர்கள் இருவரையும் பிரிவு வரை கொண்டு சென்று விடுகிறது. இதைத் தொடர்ந்து நித்யா மெனன், தன் மகளுக்கு மொட்டை போட விஜய் சேதுபதிக்கு தெரியாமல் தனது தாய் தந்தையை கூட்டிக்கொண்டு விஜய் சேதுபதியின் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறார். சென்ற இடத்தில் பாதி மொட்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது விஜய் சேதுபதிக்கு விஷயம் தெரிய வர அங்கு தன் குடும்பத்துடன் சென்று பிரச்சனை செய்கிறார். இரு குடும்பத்தாருக்கும் அங்கு மோதல் வெடிக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியும் நித்யா மெனனும் ஏன் பிரிந்தார்கள்? அவர்கள் குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை என்ன? அவர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்து என்ன? அதில் இரு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பதே இந்த தலைவன் தலைவி படத்தின் மீதி கதை.

248

வழக்கமாக நாம் பார்த்து பழகிய அதே சமயம் நம் குடும்பத்திலேயே இருக்கும் கணவன் மனைவிமார்களுக்கு இடையே நடக்கும் காதல் மோதல் சண்டையை மையமாக வைத்து இந்த தலைவன் தலைவி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தம்பதியினர் காலையில் சண்டை போடுவதும் மாலையில் அணைத்துக் கொள்வதும் என இருப்பதை கதையின் மையக்கருவாக வைத்து அதை எதார்த்தமான முறையில் காட்ட முயற்சி செய்து இருக்கிறார். ஒரு குடும்ப சண்டையை மையமாக வைத்துக் கொண்டு அதன் மூலம் ஒவ்வொரு தரப்பும், அவர்கள் சொல்லும் நியாயங்களை பின்னணியாக வைத்து, அது பிளாஷ்பேக் காட்சிகளாக வருகிறது. அதில் ஒவ்வொரு அங்கத்தினரின் பார்வையில் நகரும் கதை ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்து போகப் போக எரிச்சல் ஊட்டும் படியாக மிகவும் சத்தமான திரைப்படமாக மாறுகிறது. ஒரு சண்டையை ஆரம்பித்து திரும்பத் திரும்ப சண்டை சண்டை சண்டை.... என மீண்டும் மீண்டும் சண்டையாகவே படம் நகர்வது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் மட்டும் கொடுப்பது அல்லாது அயற்சியையும் ஏற்படுத்துகிறது. 

Advertisment

ஒன்று இதை கலகலப்பான படமாக கொடுத்திருக்க வேண்டும் அல்லது சீரியஸான படமாக கொடுத்திருக்க வேண்டும். இந்த படம் இவை இரண்டுக்கும் மத்தியில் பயணிப்பது பார்ப்பவர்களுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்தை கொடுக்கிறது. அதேபோல் படத்தில் சொல்லப்பட்ட எமோஷனலான விஷயங்களுக்கு ஆழமில்லாமல் இருப்பது சற்றே கதையிலிருந்து நம்மை விலக வைக்கிறது. இருந்தும் இந்த மாதிரியான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை வித்தியாசமான முயற்சியில் திரைக்கதை அமைத்து அதையும் ரசிக்கும்படி கொடுத்ததற்கு இயக்குநரை பாராட்டலாம். குறிப்பாக ஒரு குடும்ப சண்டையை வைத்துக்கொண்டு அதன்மூலம் பிளாஷ்பேக் காட்சிகளாக திரைக்கதையை விரித்து நான் லீனியர் பாணியில் சண்டை, பிளாஷ்பேக் பின்பு மறுபடியும் சண்டை, பிளாஷ்பேக் என ரிப்பீட் மோடில் காட்சிகள் நகர்வது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் சற்றே ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது.

250

அன்றிலிருந்து இன்று வரை நாம் அன்றாடம் அக்கம் பக்கம் மற்றும் நம் குடும்பத்திலேயே பார்த்துக் கொள்ளும்படியான தம்பதியனரை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் காதல் மோதல் என அனைத்தும் கலந்து தான் இருக்கும் அதை நாம் எப்படி கடக்க வேண்டும் என்ற விஷயத்தை கொஞ்சம் கலகலப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் சீரியஸாகவும் கூறி இருக்கிறார் இயக்குநர். கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டையை எப்படி உறவினர்கள் உள்ளே புகுந்து பெரிதாக்கி அவர்கள் பிரிவு வரை கொண்டு சென்று விடுகின்றனர் என்ற எமோஷனலான கதையை வைத்துக்கொண்டு அதை கலகலப்பாகவும் அதே சமயம் வித்தியாசமாகவும் கூறியிருப்பது இந்த படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

Advertisment

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மிகவும் சத்தமாக கத்திக் கொண்டே நடிக்கும் விஜய் சேதுபதி அதையும் கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருப்பது ஆறுதல். நித்யா மெனனுக்கு இந்த படத்தில் அதிகம் வேலை இல்லை. இருந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸில் விடாப்பிடியாக விஜய் சேதுபதிக்கு டப் கொடுத்து தனது வழக்கமான ட்ரேட்மார்க் நடிப்பின் மூலம் மீண்டும் கவனம் பெற்று இருக்கிறார். சின்ன சின்ன எமோஷனல் காட்சிகளிலும் முகபாவனை நடிப்பின் மூலமும் கவர்ந்திருக்கிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. அதேசமயம் அது க்யூட் ஆகவும் தென்படுவது படத்திற்கு இன்னொரு பிளஸ்.

247

நித்யா மெனனின் மாமியாராக வரும் தீபா இன்றைய கால மாமியார்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும் குணாதிசயம் கொண்ட நபராக வருபவர் அதை சிறப்பான முறையில் கொடுத்து பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. காளி வெங்கட், சரவணன், செம்பண் வினோத், ஆர் கே சுரேஷ், மைனா நந்தினி, சென்ட்ராயன், ரோஷினி, ஹரிப்ரியன் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வழு சேர்த்து விட்டு சென்றிருக்கின்றனர். குறிப்பாக காமெடி கதாபாத்திரத்தை ஏற்று இருக்கும் யோகி பாபு இந்த முறை நன்றாகவே காமெடி செய்து சிரிக்க வைத்திருக்கிறார். இவர் வரும் சின்ன சின்ன காட்சிகள் கூட தியேட்டரில் சிரிப்பலைகள் தென்படுகிறது. 

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. அதேபோல் பின்னணி இசையும் மிரட்டி இருக்கிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இவரது இசை அமைந்திருக்கிறது. எம் சுகுமார் ஒளிப்பதிவில் எக்ஸ்டீரியர் காட்சிகளை காட்டிலும் இன்டீரியர் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பாக அமைந்திருக்கின்றன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 

நமது வீட்டில் சதா பிரச்சனையாக இருக்கின்றது ஏதாவது ஒரு படத்திற்கு சென்று ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் அந்த ரிலாக்ஸேசனை கொடுத்ததா என்றால் சற்று சந்தேகமே! ஏனென்றால் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மிகவும் சத்தமாகவே இருக்கிறது. சத்தம் விரும்பாதவர்களுக்கு இந்த படம் சற்று அன்னியமாகவே தெரிந்தாலும், சதா சண்டையிட்டுக் கொள்ளும் கதாபாத்திரங்கள் ரிப்பீட் மோடில் சண்டை செய்வது பல இடங்களில் அயற்சி ஏற்படுத்தி இருந்தாலும், வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட திரைக்கதை அதில் நடித்த கதை மாந்தர்களின் கெமிஸ்ட்ரி, கலகலப்பாக நகரும் கதை ஓட்டம் என மற்ற விஷயங்கள் ரசிக்கும்படி அமைந்திருப்பது இந்த படத்தை வெற்றி பெற செய்து கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

தலைவன் தலைவி - ரோலர் கோஸ்டர் ரைடு!