
விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த '96' படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் '96' படகுழுவினர் பங்கேற்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உதவி இயக்குனர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது நடிகர் விஜய்சேதுபதி வாராவாரம் தன் நடிப்பில் படம் வெளிவருவது குறித்தும், ரஞ்சித்துடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என் கேள்விக்கும் பதில் அளித்து பேசியபோது...
"ஏற்கனவே வாராவாரம் என் படம் வெளிவருவதை வைத்து மீம் போட்டு தாளித்து விடுகிறார்கள். நல்ல வேளை நான் 'வடசென்னை' படத்தில் நடிக்கவில்லை. இல்லையென்றால் தொடர்ந்து மூன்று வாரம் என் படமாகத்தான் இருந்திருக்கும். மேலும் அந்த கதாபாத்திரத்தில் அமீர் நன்றாகவே நடித்திருந்தார் ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். 'காலா' படம் பார்த்துவிட்டு அன்றே அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும். அமைந்தால் தான் வேலை செய்ய முடியும். அவருக்கும் தோன்ற வேண்டும். சினிமா உணர்ச்சிகளுக்காக செய்யமுடியாது. நல்ல கதைக்கு தான் செய்யமுடியும். ஜாதி ஒழிப்பு பற்றி ரஞ்சித் பேசுவது பாராட்டுக்குரியது. எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார்.