
சிவா கிலாரி தயாரிப்பில், விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’. இப்படத்தில் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அதில் இந்திய அளவிலான டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்தது. மேலும் வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தினை விஜய் சேதுபதி பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.