
கடந்த ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாகக் கூறி மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகிய இருவர் மீதும் குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதிக்குச் சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெங்களூருவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதனால் அந்த தாக்குதல் புகாரை குற்றவியல் புகாரின் கீழ் சென்னையில் விசாரிக்க வரம்பு இல்லை என கூறி ரத்து செய்தது. அதோடு அவதூறு வழக்கை சைதப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.