விஜய் சேதுபதி இன்று இயக்குனர் சேரன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் சீதகாதி படம் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக சொல்லப்படுவது உண்மையா என்று ஒரு நிருபர் கேட்டார். இதுபோன்று எந்த பிரச்சனையும் தயாரிப்பாளர் தெரிவிக்கவில்லை, தற்போதுகூட இயக்குனரிடம் பேசினேன். படம் ரிலீஸ் ஆகிவிடும் என்றுதான் சொன்னார். நீங்கள் சொல்லும் பிரச்சனை எனக்கு தெரியாது, தெரியாத பிரச்சனையை பற்றி பேசவில்லை என்றார் விஜய் சேதுபதி.
தயாரிப்பு சங்கத்தின் சில நடவடிக்கைகளால் பலர் பாதிக்கப்படுகிறார்களே? என்று நிருபர் அடுத்த கேள்வியை கேட்க அதற்கும் பதிலளிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி, இது ஒருவர் மீது சுமத்தப்படும் பிரச்சனை அல்ல, ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை இருக்கிறது. எனக்கு மிகவும் வேதனை அளித்த ஒன்று எதுவென்றால் ஆண் தேவதை இயக்குனர் பேசியதுதான். அதற்கு தீர்வு இல்லை, யாருமே தீர்வும் சொல்ல முடியாது. ஒருவர் வாங்கிய கடனை இன்னொருவர் தலையில் கட்டினால், யார் அதை கட்டுவார். நீங்கள் செய்வீர்களா? என்னுடைய 50 லட்சம் கடனை நீங்கள் செலுத்து முடியுமா? அவர் ஒருவரிடம் பணத்தை பெற்று கடனை அடைத்திருக்கிறார். அதை மறுத்துகூட யாரும் பேசவில்லை. விஜய் சேதுபதி படம் ரிலீஸாகுவதற்காக காசு கொடுத்தார் என்று பெருமையாக பேசிக்கொள்ளலாம். ஆனால், இதுபோன்று ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன. என்னால் முடிகிறது அதனால் அந்த பணத்தை கொடுத்துவிடுவேன், இந்த பிரச்சனைகளை யார் பேசுவார்கள். அது ஒரு இடத்தில் பேசகூடிய விஷயமில்லை. எனக்கு மட்டும் இதுபோன்று நடக்கவில்லை, பலருக்கு இவ்வாறு நடந்திருக்கிறது.
இதனையடுத்து நிருபர் இதற்குதானே சங்கங்கள் உள்ளது, சங்கத்தில் பதவிக்காக நிற்பவர்களை தேர்தெடுக்கிறோம் என்று கேள்வியை அடுக்கினார். அதற்கு விஜய்சேதுபதி, நீங்கள் எளிதாக பாயிண்ட் அவுட் செய்துவிட்டீர்கள். ஆனால், அதுபோன்ற எளிதான பிரச்சனை இது அல்ல. வெளியே இருந்து பார்க்காமல், உள்ளே வந்து பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு ரிப்போர்டர் தானே உள்ளே வந்து நடப்பதை ஸ்டோரி செய்யுங்கள் பிறகு தேரிந்துவிடும் என்றார்.
அடுத்த கேள்வியாக அப்போது பொதுக்குழு சரியாக இருக்கிறது என சொல்கிறீர்களா என்று விஜய்சேதுபதியிடம் கேட்க அதற்கு அவர், நான் உங்களுக்கு பதிலளித்து விட்டேன். மீண்டும் அதையே கேட்கிறீர்கள். உங்களுக்கு பிரச்சனை எளிதாக இருக்கிறதுதானே. பின்னர் ஏன் அதை யாராலும் இங்கு சரி செய்ய முடியவில்லை. என்று விஜய் சேதுபதி கூறியவுடன் அப்போது பொதுக்குழுவில் தவறு இருக்கிறாதா என்று மீண்டும் நிருபர் கேட்க, நீங்கள் வேறு பதிலை எதிர்ப்பார்க்கிறீர்கள். என்னை சர்ச்சைக்கு ஆளாக்க பார்க்குறீர்கள் என்றார் விஜய்.
இதனையடுத்து மீண்டும் கேள்வியை அடுக்கிகொண்டே நிருபர் போக, ஒரு நிமிடம் இருங்கள் என்று சொல்லிகொண்டே இருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து விஜய் சேதுபதி, நான் உங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை என்றார். மீண்டும் மீண்டும் பேச்சை அடுக்கிகொண்டே போக, விஜய்சேதுபதி நிருபர்களின் மைக்கை கீழே இறக்கி கேள்வி கேட்டுகொண்டிருந்தவரிடம் சென்று பேசினார். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டே வருகிறேன் இருந்தாலும் நீங்கள் என்னை சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்றே கேள்வி கேட்கிறீர்கள் என்றார். நிருபர் சர்ச்சைக்காக எல்லம் இல்லை என்று மீண்டும் அவருடைய பழைய கேள்வியை சொன்னார். அதற்கு விஜய் சேதுபதி மீணடும், ஐயா பிரச்சனை இங்கு இருக்கிறது அதை ஒருவரால் தீர்க்க முடியாதது, அனைவரும் அங்கு வந்துதான் பேச வேண்டும். ஒரு நிமிடம் சொல்லகூடிய பிரச்சனை இல்லை என்றும் சொல்கிறேன். அதை தாண்டி நீங்கள் உங்களுக்கு என்ன பதில் வேண்டும். நீங்கள் கேள்வியை அடுக்கிகொண்டே போகிறீர்கள், ஆனால் முன்னரே உங்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. நீங்கள் வேறோன்று எதிர்பார்க்குறீர்கள் அது என்னிடம் இல்லை என்று நான் சொல்கிறேன். இங்கு யார் மேலும் பழி போடுவது என்பது அவசியமில்லை. இங்கு வேறு பிரச்சனை உள்ளது. அதை வெளியே சொல்வது என் வேலை இல்லை.
இதனையடுத்து வேறோரு நிருபர் கேள்விகேட்க வர, இருங்க இவர் எப்போ முடிக்கிறார்னு பார்ப்போம் என்று விஜய் சேதுபதி என்றார். இதனையடுத்து மீண்டும் அதே நிருபர், சீதக்காதிக்கும் இதே பிரச்சனை வந்தால் அதை சரிசெய்ய தயாராக இருக்கிறீர்களா என்றார். அதற்கு விஜய் சேதுபதி, சீதக்காதிக்கு பிரச்சனை ஒன்றும் வரவில்லை என்றார்.
ஒருவேளை படத்திற்கு பிரச்சனை வந்தால் என்று அந்த நிருபர் கேள்வி கேட்க, இது என்னங்க வண்டி வாங்குறதுக்கு முன்னாடியே விபத்து நடந்தது போன்று கேட்குறீர்கள் என்றார் விஜய் சேதுபதி. இதனை அடுத்து மீண்டும் அந்த நிருபர் கேள்வி கேட்க, நீங்கள் திருந்தமாட்டீர்கள் என்று வேறு கேள்வி இருக்கிறதா என வேறு நிருபர்களை பார்த்து கேட்டார் விஜய்சேதுபதி.
அப்போது ஒருவர் நேற்று நடந்த ஐந்து மாநில தேர்தலை பற்றி கேட்க, என்கிட்ட ஏன் அரசியல் கேள்விகள் கேட்குறீர்கள், அதற்கு நான் பதிலளித்து ஒரு பிரையோஜனமும் இல்லை என்று சிரித்துகொண்டே பதிலளித்தார். மேலும், அரசியல் பற்றி கருத்து தெரிவித்தாலே அரசியலுக்கு போகிறாயா என்று மீண்டும் என்னை கேட்கிறார்கள் என்றார்.