vijay sethupathi and soori about chennai theatre untouchability issue

Advertisment

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து பார்க்க சென்ற போது, அவர்களை பார்த்த திரையரங்க ஊழியர் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்து உள்ளே செல்ல விடாமல் மறுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், "இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. அதனால் தான் 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினரை எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் உள்ளே செல்ல மறுத்துள்ளனர்" என விளக்கம் கொடுத்திருந்தனர். மேலும், பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள்.

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அமைந்தகரை வட்டாட்சியரும் திரையரங்குக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு அந்த பெண்மணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளே விட மறுத்த திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிரியா பவானி ஷங்கர், கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர். சூரி பேசுகையில், "எல்லோரும் சமம். எல்லோரும் ஒன்றுதான். அதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் திரையரங்கு உருவானது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கக் கூடாது. எந்தச் சூழலில் நடந்திருக்கின்றதுஎன்று தெரியவில்லை. இருப்பினும் அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார்.

விஜய் சேதுபதி, "எப்பவும் எங்கேயும் எந்தவொரு மனிதனும் ஒடுக்கப்படுவதும்நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்ன காரணமாக இருந்தாலும் சரி. எங்க நடந்தாலும் சரி. இந்த பூமி மனிதர்கள் ஒன்றாக வாழப் படைக்கப்பட்டது. அதில் எந்த வகையிலும் வேற்றுமை நடந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" என்றார்.