
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்’. இப்படத்தில் கதாநாயகியாக சாயா தேவி நடித்திருக்க சிராஜ் , சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு ‘படிச்சிக்கிறோம்’, ‘புட்ட வச்ச’ ஆகிய பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். அக்டோபர் 18 யு/ஏ சான்றிதழுடன் படம் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு விஜய் சேதுபதி பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாகப் படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், “நம்முடைய முன்னேற்றத்துக்கு காரணமான கல்வி அவ்ளோ சுலபமா எல்லாருக்கும் கிடைத்துவிட வில்லை. கல்வியின் மகத்துவத்தை, அதன் தேவையை மற்றும் அது நம்முடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப அழகாக சொன்ன படம்.
ஒரு குழந்தைக்கு போகிற கல்வியை தடுக்குறாங்க என்றால் அது கடவுளாக இருந்தாலும் சரி, அதை எதிர்த்து நிற்பது தப்பு இல்லை என சொல்லும் படம். கிராமத்தில் கல்வி போய் சேர வேண்டும் என்று ஒரு ஆசிரியர் எடுக்கும் முயற்சி தான் இந்த சார். இந்த படம் முடியும் போது நம்ம எல்லாரும் விமல் கதாபாத்திரத்துடன் நிற்போம் என நம்புகிறேன்” என விஜய் சேதுபதி பேசுகிறார். கடந்த மாதம் நடந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிலும் விஜய் சேதுபதி கலந்து கொண்டு விமல் நடிப்பை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.