சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தை பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘பொட்டல முட்டாயி’, ‘அகாச வீரன்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு ஏற்பட்டது. 

இப்படம் ஜுலை 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். அப்போது விஜய் சேதுபதியிடம் சமூக வலைதளங்களில் செய்யப்படும் ட்ரோல்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “அவர்கள் புது படங்களுக்கு மட்டும் ட்ரோல் பண்ணுவதில்லை. பழைய படங்களுக்கு கூட பண்ணுகிறார்கள். அதைக் கிண்டல், நையாண்டி என எடுத்துக் கொள்ளலாம். நம்மலும் சின்ன வயதில் வேறு ஒரு வடிவத்தில் அதை செய்திருப்போம். அது கார்டூனாக இருந்திருக்கலாம். காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி அது பரிணமிக்கிறது. பொதுவெளியில் நாம் ஒன்றை வெளியிடுகிறோம். அதை சிலர் ரசிக்கிறார்கள். சிலர் விமர்சிக்கிறார்கள். ஒவ்வொன்றும் அவரவர்களின் பார்வையில் இருந்து மாறுபடும். அவர்களின் கருத்தில் சரி எனத் தோன்றினால் மாற்ற முயற்சிக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி அதை நிறுத்த வேண்டும் என நாம் சொல்ல முடியாது” என்றார்.