Advertisment

“பாண்டிராஜோடு படம் பண்ணக்கூடாது என இருந்தேன்” - விஜய் சேதுபதி வெளிப்படை

373

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தை பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘பொட்டல முட்டாயி’, ‘அகாச வீரன்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு ஏற்பட்டது. 

Advertisment

இப்படம் ஜுலை 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அதில் விஜய் சேதுபதி பேசுகையில், “எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நானும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன. 

கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009ம் ஆண்டிலிருந்து தெரியும். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கின்றோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால். ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது. 
இந்த படத்தின் பணிகள் தொடங்கியது ஒரு அற்புதமான அனுபவம். சத்யஜோதி நிறுவனத்தை பற்றி தெரியும். 'மூன்றாம் பிறை' படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம் . இந்த நிறுவனத்துடன் முதன் முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன். 

நித்யா மெனனுடன் 2020ம் ஆண்டில் '19 (1) (ஏ) ' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மெனன் தான் கதாநாயகி என எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பணியாற்றிய போது.'வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்' என பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு 'தலைவன் தலைவி' படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. 

Advertisment

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தோம், இதுதான் காட்சி, இதுதான் வசனம், இதுதான் நடிப்பு, இதுதான் நடனம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்காக என்ன செய்யலாமோ அல்லது அதனை எப்படி எல்லாம் திரையில் காண்பிக்கலாமோ அல்லது இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டு அதை சரியாக வழங்கிட வேண்டும் என்று மெனக்கெடும் அற்புதமான நடிகை தான் நித்யா. அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

பாண்டிராஜ் பற்றி சொன்னேன். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.
இதை ஒரு பயணத்துடன் ஒப்பிடுகிறேன். பிரயாணம் செய்து கொண்டிருப்போம். தோராயமாக 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்கிறோம் என்றால்.. அதில் ஒவ்வொரு கிலோ மீட்டரும் மனதில் தங்காது. ஏதோ ஐந்தாறு இடங்கள் நினைவில் பசுமையாய் தங்கிவிடும். எங்காவது இளைப்பாறியிருப்போம், எங்காவது உட்கார்ந்து இயற்கையை ரசித்திருப்போம், எங்காவது சாப்பிட்டிருப்போம், எதுவும் செய்யாமல் நின்று இருப்போம், மேகங்களை ரசித்திருப்போம், புகைப்படம் எடுத்திருப்போம். அந்த நினைவுகள் மட்டும் தான் அந்த பயணத்தில் கிடைத்திருக்கும். அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மற்றொரு முறை பயணம் செய்யலாமா எனத் தோன்றும். அதைப் போன்று தான் அவருடன் நான் இணைந்து பணியாற்றியது. மிக அற்புதமான பயணத்தில் கிடைக்கக்கூடிய நினைவுகளை போன்றது தான் அது. 

உண்மையை சொல்லப்போனால் சற்று கடினமாக இருந்தாலும், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கடைசி நாளன்று படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு ஓய்வாக 45 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதே, இன்னும் ஒரு வார காலம் நீடித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு படப்பிடிப்பு முழுவதும் இனிமையான அனுபவங்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படத்தில் மகிழினி என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். திரைக்கதையில் ஆண் குழந்தை தான் இருந்தது. ஆனால் இயக்குநர் மகிழினியை பார்த்தவுடன் இவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என தேர்வு செய்தார். இந்தப் படத்தில் எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வ குழந்தை தான் மகிழினி என்று நான் நினைக்கிறேன்.

திரைக்கதையில் இயக்குநர் எழுதியதை குழந்தையான மகிழினி நடிக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஆச்சரியமும் இருந்தது. இயக்குநரிடம் நீங்கள் எழுதியதெல்லாம் திரையில் வருமா என்று கேட்டேன். அவர் வரும், நடக்கும் என்றார். அவர் இயக்கத்தில் வெளியான 'பசங்க 'படத்தில் ஒரு காட்சியில் குழந்தை ஒன்று அங்கு எங்கும் ஓடி அந்த காட்சியை உயிர்ப்புள்ளதாக மாற்றி இருக்கும். அந்தக் காட்சியை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்திலும் மகிழினி மற்றும் முத்துமணி ஆகிய இரு குழந்தைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தக் கதையில் இயக்குநர் என்ன என்ன நினைத்தாரோ அதை எல்லாம் அந்த குழந்தை மகிழினி அற்புதமாக வழங்கினார். இந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவரும். அந்தக் காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

director pandiraj actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe