
விஜய் சேதுபதி நடிப்பில், 7சி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘ஏஸ்’. இப்படத்தில் ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, யோகி பாபு, பப்லு பிருத்வீராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது.
இப்படம் நேற்று(23.05.2025) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். தொடர்ந்து நிறைய திரையரங்குகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளாரென கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள திரையரங்கில் திடீர் தியேட்டர் விசிட் அடித்தார். அவருடன் பட இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரும் வந்திருந்தனர். ரசிகர்களின் வரவேற்பை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், “படம் வெளியாகியிருப்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. அது எங்களுடைய தவறுதான். சில நெருக்கடியால் திடீர்னு படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் வந்துவிட்டது. ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு நேரம் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒரு வாரம் முன்பு தான் விளம்பர பணிகளை ஆரம்பித்தோம். இருந்தாலும் படத்திற்கு ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் பாசிட்டிவாக இருக்கிறது. அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. பார்ட் 2, அதற்கான கதை அமைந்தால் எடுப்போம்” என்றார்.