
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-இன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழா ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் வெளியான ட்ரைலரில் குறிப்பிட்ட நிலையில் படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு பேசிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஜூன் 14ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருப்பதாக சொல்லியிருந்தார். இந்த நிலையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே ஜூன் 13ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படமும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைலர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் முன்னணி நடிகர்களின் 50 வது படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.