சென்ற வாரம் ‘திருமணம்’படம் வெளியாகிக் குடும்பங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த படத்தின் இயக்குனர் சேரன் அவர்கள், இயக்குனர் மிஷ்கின் பற்றியும், நடிகர் விஜய் சேதுபதி பற்றியும் நெகிழ்சியுடன் கூறியுள்ளார். விரைவில் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகவுள்ளதுக் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சேரன் பார்வையில் நடிகர் சேரன் எப்படிப்பட்டவர்?
எப்பவுமே நான் சொல்லுவேன். எனக்குள் இருக்கும் இயக்குனர்தான் பெரியவர், நடிகர் ஒரு சப்போர்ட்டுக்கு இருக்கிறவர் தான். ஒரு கேரக்டரை எழுதும்போது அதில் யாரும் நடிக்கவில்லையென்றால் நானே நடிப்பேன். திருமணம் படத்தில்கூட நான் நடிக்காமல் விஜய்சேதுபதி நடித்திருந்தால் இதன் ரீச்சே வேற. நிறையப்பேர் தியேட்டருக்கு வந்துருப்பாங்க, எல்லா குடும்பங்களுக்கும் இந்தப் படம் போய் சேர்ந்திருக்கும். எனக்கென ரசிகர் மன்றங்களோ, பேனர் வைக்கிறவர்களையோ நான் வைத்திருக்கவில்லை. ஏனென்றால், அவரவருக்கு வேலைகள் இருக்கும், அதை நாம் கெடுத்துவிடக் கூடாது. ஆனால், இதையெல்லாம் செய்கிறவர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் கூட்டம் வரும், அவர்களைப்போன்றோர் இந்தப் படதில் நடித்திருந்தால் நல்ல ரீச் கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் நடிக்க மாட்டார்கள்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நீங்கள் யுத்தம் செய் படத்தில் நடித்தீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
மிஷ்கின் ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி. சினிமாவையே உயிர்மூச்சாக கொண்ட, சினிமாவைப் பற்றியே எப்போதும் யோசிக்கிறப் படைப்பாளி. மற்ற இயக்குனர்கள் ஒரு காட்சியை, ஒரு திரைக்கதையைப் பார்க்கிறப் பார்வைக்கும் மிஷ்கின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கும். ஏ.ஜி.ஸ் நிறுவனத்தில் நான் அடுத்த தலைமுறை என்ற படம் நடிப்பதாக இருந்தது. அப்போது யுத்தம் செய் படம் மிஷ்கினிடம் இல்லை. ஏ.ஜி.ஸ் நிறுவனம் எண்ணிடம் “மிஷ்கின் ஒரு அற்புதமான கதைச் சொன்னார், அது உங்களுக்கு நல்லா சூட் ஆகும். ஆனால் பட்ஜெட் கொஞ்சம் முரணாக இருந்தது, அதனால் நாங்கள் அதை தயாரிக்கவில்லை”என சொன்னார்கள். நாம் பத்து படங்களுக்கு மேல் பண்ணிட்டோம், தொடர்ந்துப் படங்களும் வருகிறது. எனவே, இந்தப் படத்தை மிஷ்கினுக்குக் கொடுத்தால் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று, எனது படத்தைத் தள்ளிவைத்துவிட்டு மிஷ்கினைக் கூப்பிட்டு பட்ஜெட்டில் இருந்த பிரச்சனைகளைச் சரிசெய்து, யுத்தம் செய் படத்தை எடுக்க உதவினேன். மிஷ்கினை பார்த்து நான் ரசித்ததிற்கும், பிரமித்ததிற்கும் செலுத்திய நன்றிக்கடன் அதுதான்.
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்ப்பது சேரனும் விஜய்சேதுபதியும் சேருகிறப் படத்தை. விஜய் சேதுபதிக்கும் உங்களுக்கும் எந்த விஷயங்களில் ஒத்துப்போகிறது.
படைப்பு ரீதியாக விஜய்சேதுபதி என் படங்களை மதிக்கிறார். நல்லப் படங்களை இயக்கிய இயக்குனர் என்றளவில் என்மீது மரியாதை வைத்துள்ளார். முதலில் அவர் எல்லா மனிதரிடமும் அன்புகாட்டுவார், மரியாதையுடன் பழகுவார், நன்றாக பழகிவிட்டாலும் போகப்போக அந்த மரியாதை அதிகரிக்கும் ஒழிய குறையாது. அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது மட்டுமில்லாமல் வித்தியாசமான நல்ல படைப்புக்களைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் நிறைய இருக்கிறது. நல்ல கதைகளை சரியாக தேர்ந்தெடுக்கிறார். நான் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தபோது விஜய் சேதுபதி என்னிடம் “நீங்கள் தொடர்ந்து படம் எடுக்கவேண்டும், வாருங்கள் நாம் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம்”என்றுச் சொன்னார். அதைப்பற்றிப் பேசிக்கிக்கொண்டிருக்றோம், விரைவில் அப்படியொத் திரைப்படம் வரும்.