மங்களகரமான மஞ்சள் - ஒத்திகை பார்த்த விஜய்

vijay  rehearsal of tvk flag

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் கட்சிக் கொடியினை அம்மாநாட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ண கொடியின் மத்தியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் கட்சியின் முதல் மாநாட்டைச் செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கொடியேற்றும் விழாவிற்காக கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் உள்ள அலுவலகத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலுவலகம் உள்ளே கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் வெளிப்புறத்திலும் வண்ணங்கள் பூசும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் 300 நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். அந்த கொடி மஞ்சள் நிறத்தில் நடுவில் விஜய்யின் முகம் இடம்பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை ஏற்றி இறக்கி ஒத்திகை பார்த்த விஜய், அரைமணி நேரம் அலுவலகத்திலிருந்து அறிமுக நிகழ்ச்சி குறித்து ஆலோசித்தார். அப்போது விஜய்யின் அருகில் இருந்த புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற வேஷ்டி சட்டையில் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் விரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

actor vijay Bussy Anand Tamilaga Vettri Kazhagam tvk
இதையும் படியுங்கள்
Subscribe