vijay political party members pledge

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அந்த அறிக்கையில் வருகின்ற 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த அவர், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். இதனிடையே கட்சியின் பெயரில் ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டினர். இதையடுத்து கட்சியின் பெயரைச் சரி செய்து, தமிழக வெற்றி‘க்’ கழகம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கட்சியின் முதல் கூட்டமாக, செயற்குழு கூட்டம் கடந்த 7ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

அந்த உறுதிமொழி பின்வருமாறு, “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

Advertisment

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என்பது ஆகும்.