விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டநிர்வாகிகள் என 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது, விஜய்யின் அரசியல் வருகையில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும்நிர்வாகிகளிடம் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்;எப்போதும் தேர்தலுக்குத்தயாராக இருங்கள்;நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.