vijay makkal iyakkam next plan to open library in all 234 constituency

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது. இதனிடையே பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' என்ற இரவு பாடசாலை திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இலவச சட்ட ஆலோசனை மையம் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் நூலகம் தொடங்கப்படவுள்ளதாகச் சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் ‘தளபதி விஜய் நூலகம்’ என்ற பெயரில் நூலகம் தொடங்கப்படவுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) தாம்பரம், பல்லாவரம் தொகுதியில் தொடங்கப்படவுள்ளது. இதை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்கிறார். அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

Advertisment

மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து 21இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.