
நடிகர் விஜய் படங்களில் நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அண்மையில் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்து திட்டம் மூலம் உணவு வழங்கி வரும் நிலையில் விஜய் அவர்களை அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் தொடர்ந்து தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யும் விஜய், அடுத்ததாக மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை மதிய உணவு இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு வேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.