vijay leo third single released

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் படக்குழு நேற்று புது சிக்கலில் சிக்கியது. படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான்...' பாடலில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றிய 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு ஊதியம் வந்துசேரவில்லை எனக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் தராமல் இருந்ததாகவும் இது பற்றி தயாரிப்பு தரப்பிடம் கேட்டபோது, சரியாக பதிலளிக்கவில்லை எனவும் புகார் கொடுத்த கலைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது அவர்களுக்கும், நடனக் கலைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்த நடனக் கலைஞர்கள் புகாரை ஃபெப்சி தலைவர் செல்வமணி மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ட்ரைலரில் இடம்பெற்ற அந்த சர்ச்சையான வசனம் தற்போது மியூட் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மதுரையில் 18 ஆம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளதாக போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளதாகவும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் தெரிவித்துள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் இதேபோல் போலி டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்தப் படத்திற்கு 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 5 காட்சிகளுக்குத்தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதோடு ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான 'அன்பெனும்...' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலைப் பார்க்கையில் விஜய் மற்றும் த்ரிஷாவின் காதலையும் அவர்களது குடும்பத்தையும் பற்றி விரிவாகச் சொல்லியிருப்பது போல் தெரிகிறது.