லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது.
முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும்படக்குழு அறிவித்தது. இந்த வெற்றியை பிரம்மாண்டமாக படக்குழு கொண்டாடியது. இதையடுத்து ‘நா ரெடி...’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிலும், 28 ஆம் தேதி உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.